அந்த இளைஞருடைய பெயர் நிக். இருபத்தெட்டு வயது. நடக்கிறார், சிரிக்கிறார், பேசுகிறார், வாசிக்கிறார், கால்ஃப் விளையாடுகிறார். கீழே விழுகிறார், மீண்டும் அவரே சிரமப்பட்டு எழுந்து நிற்கிறார்…
கொஞ்சம் பொறுங்க சார். 28 வயது ஆள் இதையெல்லாம் செய்யறது ஒரு பெரிய விஷயமா? இதைப்போய் மகா அதிசயம் மாதிரி சொல்ல வந்துட்டீங்களே!
அதிசயம்தான் சார். இவ்வளவையும் சர்வசாதாரணமாகச் செய்கிற நிக்கிற்கு இரண்டு கைகளும் இல்லை. இரண்டு கால்களும் இல்லை!
1982-ம் வருடம் ஆஸ்திரேலியாவில் நிக் பிறந்தபோதே அவருக்குக் கைகள், கால்கள் இல்லை. வெறும் உடம்பு மட்டும்தான். இதற்கு என்ன மருத்துவக் காரணம் என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
காரணம் கிடக்கட்டும், இந்தக் குழந்தையை இப்போது என்ன செய்வது?நிக்கின் பெற்றோர் துடித்துப்போனார்கள். “உடம்பில் ஒரு சின்ன ஊனம் உள்ளவர்கள்கூட இயல்பாக வாழமுடியாமல் சிரமப்படுவதைப் பார்க்கிறோம், இந்தப் பிள்ளை கையும் காலும் இல்லாமல் எப்படி வளரப்போகிறது?
ஆனால் பெற்றோர் அவனை நல்லவிதமாக வளர்க்க முடிவு செய்தார்கள். ஊனமுற்றோர் பள்ளியில் சேர்க்காமல், வழக்கமான பள்ளியில் சேர்த்தார்கள். அப்படி சேர்ப்பதற்கே நிறைய போராட வேண்டியதாயிருந்தது. ஆனால் பள்ளியில் சக மாணவர்களின் கிண்டலுக்கு ஆளானான் சிறுவன் நிக். இந்த கேலியைப் பார்த்த சிறுவன் நிக் தற்கொலை செய்ய முடிவு செய்தான்.
நல்லவேளையாக, நிக் தற்கொலை செய்துகொள்ளவில்லை. “எனக்காக இவ்ளோ கஷ்டப்பட்ட எங்க அம்மா, அப்பாவை நினைச்சுப் பார்த்தேன். சாகறதுக்கு மனசு வரலை!’அதன்பிறகு, நிக் நிறையப் படிக்க ஆரம்பித்தார். அவரைப்போலவே உடல் குறைபாடுகளால் அவதிப்பட்டவர்கள், அதைத் தைரியமாக எதிர்த்து நின்று ஜெயித்தவர்களைப் பற்றியெல்லாம் வசித்து, கேட்டுத் தெரிந்துகொண்டார். அப்போதும், அவருக்கு ஒரு சந்தேகம் மட்டும் தீரவில்லை. “என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் நான் ஏன் வாழணும்?’
விரைவில், அந்தக் கேள்விக்கும் பதில் கிடைத்தது. நிக் தன்னுடைய ஊனத்தைப்பற்றிக் கவலைப்படாமல் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்கிறார் என்பதைக் கவனித்த சிலர், “நீங்க இந்த விஷயத்தை மேடையேறிப் பேசணும்’ என்றார்கள். அது நல்ல யோசனையாகப் பட, இப்போது நிக் மேடைப் பேச்சாளராகிவிட்டார். அவரது வாழ்க்கை புத்தகமாகவும் வந்திருக்கிறது. “லைஃப் வித்தவுட் லிமிட்ஸ்’ என்ற தலைப்பில்.
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=4042&ncat=18
Wonderful and Thrilling to see the activities of Thiru. Nick.
If you think You can Win, Surely every one can Win after seeing Mr. Nick and his activities.