யார் தயவுமின்றி, ஓய்வறியாமல் 112 வயது “இளைஞர்’ ஒருவர் உழைத்து வருவது சிதம்பரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் மணலூர் கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் (112). இவருக்கு மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டு, மனைவியுடன் வசித்து வந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன் மனைவி இறந்து விட்டார். ஆனால், தனது மகள்கள் வீட்டில் தங்காமல் தள்ளாத வயதிலும், யார் தயவும் இன்றி தனியாக வசித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அடுத்தவர்களை எதிர்பார்க்காமல் ஆடுகள் மேய்த்தும், தனக்கு தெரிந்த கயிறு திரிக்கும் தொழிலைக் கொண்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் காலத்தை ஓட்டி வருகிறார். ஆடு மேய்த்த நேரம் போக, கிழிந்த நைலான் சாக்குகளைக் கொண்டு கயிறு செய்து விற்பனை செய்து அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார்.
என்னால் முடியாதது ஒன்றும் இல்லை என வெறுமனே வாயால் கயிறு திரித்து உழைக்க விரும்பாமல், அடுத்தவர்களை நம்பியே காலத்தை ஓட்டும் இந்தக்கால இளைஞர்கள் மத்தியில், தள்ளாத வயதிலும், யாருடைய தயவையும் எதிர்பாராமல் உழைத்து சாப்பிடும் முதியவரை, இல்லை, இல்லை இந்த 112 வயது”இளைஞரை’ நினைத்தால் பெருமைப்படாமல் இருக்க முடியாது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=143437
Very inspiring. you have to learn from this old man., sorry young man