சிறுவயதில் எவரெஸ்ட்டை தொட்டு, தன் பயணத்தை சுய சரிதையாக எழுதியுள்ள அர்ஜுன் வாஜ்பாய்: நொய்டாவில் ஒரு சாதாரண;குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். சிறு வயதிலேயே சாகச கதைகளைக் கேட்பதில், படிப்பதில் ஆர்வம் அதிகம். பெரியவனான பின், சாதனைகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.பத்து வயது வரை நானும், மற்ற குழந்தைகளைப் போல், படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வமாக இருந்தேன்.ஒரு முறை புத்தகத்தில், மலையேறுவது குறித்து படித்தேன். அதில் ஏற்பட்ட ஆர்வம், என்னை இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை தொட வைத்தது.
யார் வேண்டுமானாலும், எவரெஸ்ட்டிலோ அல்லது வேறு மலைகளிலோ ஏறி விட முடியாது. மலை சிகரத்தின் உயரம், தன்மை, அங்கு உள்ள குளிர், ஆக்சிஜன் அளவு போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து பார்த்த பின், வயது, உடல் தகுதி ஆகியவற்றை கொண்டு தீர்மானிப்பர். இமயமலை மீது யாரும் தனியாக ஏற முடியாது. பல சிகரங்களில் ஏறியவர்களின் வழிகாட்டுதல், சக மலையேற்ற வீரர்களின் ஒத்துழைப்பு, பொருட்களை மேலே தூக்கிச் செல்வதற்கு உதவி பணியாளர்கள், என, எல்லாம் சேர்ந்தால் தான் சிகரம்.நல்ல குழு இல்லாவிட்டால், தோல்வி நிச்சயம்.
ஆரம்பத்தில், என் பெற்றோர் தடுத்தாலும், என் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, என்னை அனுப்பினர். பணத்திற்கு ஸ்பான்சரரும், அரசும் உதவ முன் வரவில்லை. என் உறவினர்களின் சொந்த முயற்சியால், பணத்தை தயார் செய்தோம். பல பிரச்னைகள், சிரமங்களுக்கு பின், ஒரு நல்ல மலையேற்றக் குழுவினருடன் மலையேறினேன்.கடந்த மே மாதம், எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தேன். இதன்பின், மலையேறுவதில் என் ஆர்வம் மேலும் அதிகமானது. ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள பெரிய சவாலான சிகரங்களையெல்லாம் தொட்டு வர விரும்புகிறேன். வட, தென் துருவங்களுக்குப் பயணம் செய்ய வேண்டும். எனக்கு நல்ல ஸ்பான்சரர் கிடைத்தால், இந்த துறையில் இந்தியாவிற்கு நல்ல பெயர் கிடைக்க பாடுபடுவேன்.
http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93