முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி: என் அப்பாவின் பணி நிமித்தம் காரணமாக, பல ஊர்களிலும் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எட்டாம் வகுப்பை திருச்சியிலும், ஒன்பதாம் வகுப்பை குஜராத் பரோடாவிலும் படித்தேன். பெங்களூரு ஜோசப் பள்ளியில் பிளஸ் டூ முடித்தேன். அதே ஊரில் ஜோசப் கல்லூரியில், பி.ஏ., சேர்ந்தது என் வாழ்வில் திருப்பு முனையாக இருந்தது.பொருளாதார சிரமங்களுக்கிடையே நான் படித்துக் கொண்டிருந்த போது, ஐ.ஏ.எஸ்., ஆக லட்சியமாக இருந்தேன்.
ஒரு புறம் கல்வி தேர்வுக்கு தயாராக இருந்தாலும், மறுபுறம் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வாகி கொண்டு இருந்தேன். கஷ்டப்பட்டு கல்வி கட்டணம் கட்டினாலும் விடுதிக் கட்டணம் கட்டுவதற்கு சிரமமாக இருந்தது. என் பேராசிரியர் ஆசிர்வாதம் என்னை ஊக்கப்படுத்தி, உதவினார்.கல்லூரி நிர்வாகம் எனக்கு அதிகம் உதவியது. இரவு 12 மணி நேரம் வரை படித்து, பின் காலை ஆறு மணிக்கு எழுந்து படிப்பேன். தேர்வுக் காலம் நெருங்கி கொண்டிருந்தது. நான் பொருளாதாரம், வரலாறு, அரசியல், அறிவியல் போன்ற தேர்வுகளில் ஆய்வுக் கட்டுரை எழுதுவது போல் தேர்வு எழுதினேன். மூன்று தேர்வுகளிலும் மைசூர் பல்கலையிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன்.கல்லூரியில் முதல் மாணவனாக வந்ததால் 100 ரூபாய் பரிசு தொகையை ராஜாஜியின் கையால் பெற்றேன்.
பி.ஏ., முடித்தவுடன் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதினேன். ஆனால், இரண்டு மதிப்பெண்களில் தவறிப் போய் ஐ.ஆர்.எஸ்., கிடைத்தது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பணியாற்றிய பிறகு என் நேர்மைக்கும், உண்மைக்கும் பரிசாக 2000 ஆம் ஆண்டு இந்தியத் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமித்தனர்.கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய லோக்சபா தேர்தலை சிறப்பாக நடத்தினேன். இப்போதும் மதிய நேரங்களில் தூங்கச் செல்லாமல் படித்துக் கொண்டிருக்கிறேன். படிப்பு தான் என் வாழ்வின் ஆதார சுருதி.
http://www.dinamalar.com//splpart_detail.asp?Id=93&dtnew=12/1/2010