குளத்தில் சிறு கல் ஒன்றைப் போட்டால் அது தண்ணீருக்குள் மூழ்கிவிடுகிறது. ஆனால், மிகப் பெரிய கப்பல் தண்ணீரில் மிதப்பதை நாம் பார்க்கிறோம். இதற்குக் காரணம் என்ன? இந்த உண்மையை முதன் முதலில் கண்டறிந்தவர்தான் ஆர்க்கிமிடீஸ் எனும் விஞ்ஞானி.
ஆர்க்கிமிடீஸ் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு கணித மேதை. இவர், இத்தாலி நாட்டைச் சேர்ந்த சிசிலித்தீவில் சைரக்யூஸ் எனுமிடத்தில் கி. மு. 287- இல் பிறந்தார். சைரக்யூûஸ ஆண்டு வந்த அரசனுக்கு இவர் மிகவும் உதவியாக இருந்து வந்தார்.
ஒரு நாள் அரசன், தங்கத்தாலான கிரீடம் ஒன்றை ஆர்க்கிமிடீஸிடம் கொடுத்து, அது சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டதுதானா அல்லது வேறு உலோகம் அதில் கலந்திருக்கிறதா என்று கண்டுபிடிக்கும்படிக் கேட்டுக்கொண்டான்.
கிரீடத்திற்கு எந்தவிதமான பழுதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் சொன்னான். முதலில் ஆர்க்கிமிடீஸýக்கு அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்றே தெரியவில்லை. அதே சிந்தனையுடன் ஆர்க்கிமிடீஸ் குளிக்கச் சென்றார். தண்ணீர் நிரம்பிய குளியல் தொட்டிக்குள் இறங்கியவுடன் தண்ணீர் மட்டம் உயர்ந்தது.
சிறிதளவு தண்ணீர் வெளியே வந்தது. ஆர்க்கிமிடீஸ் இதைப் பார்த்தார். உடனே அவருக்கு ஒரு உண்மை புலப்பட்டது. “யுரேக்கா! யுரேக்கா!’ என்று கத்திக்கொண்டே குளியல் தொட்டியிலிருந்து எழுந்து ஓடினாராம்!
ஆர்க்கிமிடீஸ் செய்தது இதுதான். ஒரு சிறு தொட்டியில் நீரை நிரப்பிக் கிரீடத்தை அதனுள் மூழ்கும்படிச் செய்தார். அதனால் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் எடையை அளந்துகொண்டார்.
பிறகு, கிரீடத்தின் எடைக்குச் சமமான சுத்தத் தங்கத்தை எடுத்து, நீர் நிரம்பிய மற்றொரு தொட்டியில் மூழ்கும்படிச் செய்தார். அதனால் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் எடையையும் கணக்கிட்டார். கிரீடம் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டதாக இருந்தால் இரு எடைகளும் ஒன்றாக இருக்கவேண்டும் அல்லவா?
ஆனால் அவ்விதம் இல்லை. கிரீடத்தால் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் எடையும், சுத்தமான தங்கத்தால் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் எடையும் ஒன்றாக இருக்கவில்லை. எனவே, கிரீடம் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டது அல்ல என்று முடிவு செய்தார். இதிலிருந்து ஓர் அரிய அறிவியல் உண்மையையும் இவர் வெளியிட்டார்:
“”ஒரு திடப்பொருளுக்குக் காற்றில் இருக்கும் எடையைவிட, திரவத்தில் இருக்கும் எடை குறைவாக இருக்கும்; இந்த இரு எடைகளுக்கும் உள்ள வித்தியாசம் திடப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமம்.” இதுதான் ஆர்க்கிமிடீஸ் தத்துவம் ஆகும்.
கணிதத்தில் மட்டுமின்றி, வானவியலிலும் பெüதிகத்தின் பல துறைகளிலும் ஆர்க்கிமிடீஸ் ஆராய்ச்சி செய்து பல அரிய உண்மைகளை உலகுக்குத் தந்துள்ளார்.
http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Siruvarmani&artid=345177&SectionID=145&MainSectionID=145&SEO=&Title=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D