என் சொந்த ஊர் புதுச்சேரியில் உள்ள திருக்கனூர். நான் புதுச்சேரி கதிர்காமம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறேன். பள்ளிக்காக தினமும் 50 கிலோ மீட்டர் பயண நேரம் தவிர மற்ற நேரங்களில் கால்பந்தாட்ட பயிற்சி தான் பொழுது போக்கு. பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் செந்தில் சார், கால்பந்தாட்ட வீரர் என்பதால், எனக்கு ஊக்கமளித்து, கால்பந்து விளையாடச் செய்தார். பள்ளியில் மைதானம் இல்லாததால், கிராமத்தில் காலியாக உள்ள இடங்களில் பயிற்சி செய்வோம். விடுமுறைகளில், பக்கத்து ஊர் பள்ளி மைதானத்தைப் பயன்படுத்துவோம்.
கால்பந்து விளையாடத் தேவையான ஷூ மற்றும் பிரத்யேக உடைகளை ஆசிரியரே தன் சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தார். அவர் கொடுத்த பயிற்சி தான் என்னை தேசிய போட்டிகளில் பங்கேற்கச் செய்தது. போட்டிகளில் பங்கேற்க, முதலில் ஒரிசா சென்ற போது தான், முதன் முதலில் ரயிலை பார்த்தேன். போட்டிக்காக ஒரிசாவிலிருந்து, உத்ராஞ்சல் சென்றேன். அதன் பின், 2008ல் வியட்நாமில் நடந்த பெண்கள் திருவிழாவிற்கான கால்பந்தாட்டத்தில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்தது. என் முதல் போட்டித் தொடரில் பெற்ற அந்த வெற்றி தான், என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு.
என் பெற்றோர் படிக்கவில்லை என்றாலும், என் அண்ணன் மகேஷ் தான் எனக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார். நான் கால்பந்து மட்மல்ல, கோ-கோ, கைப்பந்து, கபடி என பல விளையாட்டுகளில் பதக்கங்கள் குவித்துள்ளேன். இந்திய அணிக்கு உலகக் கோப்பை போட்டியில் பதக்கம் வாங்கித் தர வேண்டும் என்பது தான் என் லட்சியம். அதே உத்வேகத்துடன் தான் தினமும் பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
http://www.dinamalar.com//splpart_detail.asp?Id=93&dtnew=11/30/2010