தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ரத்னாம்பாள், எட்டாம் வகுப்பு தனித்தேர்வை ஆர்வமுடன் எழுதி வருகிறார். இவரது ஆர்வத்தை ஆசிரியர்கள் பலரும் பாராட்டினர்.
எட்டாம் வகுப்பு தனித்தேர்வு, கடந்த 7ம் தேதி முதல் நடந்து வருகிறது; இன்று அறிவியல் பாடத்தேர்வு நடக்கிறது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று சமூக அறிவியல் பாடத்தேர்வை 216 பேர் எழுதினர். இத்தேர்வை, தாராபுரம், என்.ஜி.ஜி.ஓ., காலனியை சேர்ந்த ரத்னாம்பாள் எழுதினார். இவருக்கு வயது 60.
அவர் கூறுகையில்,””45 ஆண்டுக்கு முன் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றேன். தொடர்ந்து கல்விபயிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்களுக்கு பிறகு, தற்போது தனியாக வசித்து வருகிறேன். பலர் கல்வி பயில உதவி செய்து வருகிறேன். “”கடந்த 20 ஆண்டுகளாக யோகா, தியானம் செய்து வருகிறேன். பள்ளி மாணவர்கள் உட்பட மற்றவர்களுக்கும் யோகா கற்றுக்கொடுக்கிறேன். என் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இப்போது தேர்வு எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளேன். தியானம் செய்வதால், மனப்பாடம் செய்ய சுலபமாக இருக்கிறது. படித்ததும் மனப்பாடம் செய்யவும், மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளவும் முடிகிறது. அடுத்து பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதி வெற்றி பெறுவேன்,” என்றார்.
வாய் பேச இயலாத, காது கேளாத மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கலா(18) என்பவரும் எட்டாம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார். இதுகுறித்து அவரது தாய் இந்திரா கூறுகையில்,””தம்பி மகளான கலாவை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். பிறப்பிலேயே பாதிப்பு இருந்தது. ஐந்தாம் வகுப்பு வரை சாதாரண பள்ளியில் பயின்று வந்தாள். அதன் பின், தற்போது வீட்டில் வைத்து கற்றல் பயிற்சியை அளித்து வருகிறேன். பிற மாணவர்களை போல் நன்றாக படிக்கிறாள். தொடர்ந்து ஊக்கம் அளித்து, இவளது குறைகளை கடந்து சாதிக்க வைப்பேன்,” என்றார். பெற்றோரின் வற்புறுத்தலுக்காக மட்டுமே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வாய்ப்பு இருந்தும் தவறாக பயன்படுத்தும் மாணவர்கள் மத்தியில், படிப்பின் மீது இவர்கள் கொண்டுள்ள மோகத்தை, தேர்வு எழுத வரும் சக மாணவர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=143295