;என் சொந்த ஊர் சென்னை. எங்க வீட்டில் ஐந்து பெண்கள். நான் தான் கடைசி பெண். ஆவடியில் உள்ள இமாகுலேட் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் படித்தேன். என் அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படை, என் பள்ளி தான். “கபடி விளையாட்டில் நீ கண்டிப்பா உயரம் தொடுவாய்’ என்று ஊக்கமளித்தனர்.
;நான் கபடி விளையாடுவதில் என் அம்மாவிற்கு விருப்பமில்லை. அரை மனசா தான் போட்டிகளுக்கு அனுப்புவார்.தேசிய அளவிலான விளையாட்டில் பங்கேற்க குஜராத் செல்லும்போது, எதிர்பாராத விதமா என் அம்மா உடல் நலம் பாதிக்கப்பட்டார். என் பள்ளி ஆசிரியைகள் தான் என்னை மனதளவில் தேற்றி போட்டிக்கு அனுப்பினர். அதில் நாங்கள் தோல்வியடைந்தோம். அப்ப தான், கபடியில் பெரிய ஆளா வருவாய் என்று ஆசீர்வதித்தார் என் அம்மா. பின், பத்து நாளில் இறந்து விட்டார். அந்த வார்த்தைகள் என்னை இன்னும் மெருகேற்றின.கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் போதே கான்ஸ்டபிளா வேலையில் சேர்ந்து விட்டேன். எங்க துறையில் நான் தான் கபடி ஸ்டார்.
இந்த முறை ஆசிய போட்டியில், முதல் முறையாக பெண்கள் கபடி குழுவை இணைத்தனர். இதில் நாம் ஜெயிப்போம்னு முழு நம்பிக்கையுடன் தயாரானோம்.இந்தியாவில் இருந்த கபடி கோச் நிறைய பேர் இப்ப வெளிநாட்டு டீம்களுக்கு கோச் ஆனதால், நம் டெக்னிக் எல்லாம் அந்நாட்டு வீரர்களுக்கு அத்துப்படி. இந்தியன் டீம் விளையாடும் போது அதை வீடியோ எடுத்து, எங்க டெக்னிக்கை தெரிந்து கொண்டு அவர்களும் பின்பற்றுவதால், நாங்க டெக்னிக்கை மாற்றிக் கொண்டோம்.இந்த முறை ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கப்பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்த இந்தியா ஆண்கள் கபடி டீமும், பெண்கள் கபடி டீமும் இணைந்து விளையாடியதில், இந்தியா ஆறாவது இடத்திற்கு வந்தது. பரிசு வாங்கிக் கொண்டு இந்திய கொடியைப் பிடித்துக் கொண்டு, மைதானத்தில் நாங்க ஓடிய அந்த சந்தோஷ தருணம் இன்னும் கண்களிலேயே நிற்கிறது.
http://www.dinamalar.com//splpart_detail.asp?Id=93&dtnew=12/9/௨௦௧௦